Wednesday, May 9, 2018

புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புகார்களை பதிவு செய்வது தொடர்பாக 8வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடிப்புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி,மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உட்பட 69 பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

இவற்றை விசாரித்து நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு வழக்குகளில் உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி போலீஸார் நடந்து கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. போலீஸார் தங்கள் விருப்பம்போல செயல்படுகின்றனர்.

இந்தியாவில் 2012-ம் ஆண்டில் 60 லட்சம் வழக்குகள் பதிவாயின. அதே அளவு புகார்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன. போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் புகார்தாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். வழக்கின் விசாரணையும் பாதிக்கப்படும். சில நேரங்களில் போலீஸார் உண்மைகளை திரித்து, சாதாரண குற்றத்தை கடுமையானதாகவும்,கடுமையான குற்றத்தை சாதாரணமாகவும் மாற்றுகின்றனர். எனவே,தமிழக காவல்துறை இயக்குநருக்கு சில வழிகாட்டுதல்களை தெரிவிக்க விரும்புகிறது.

வழிகாட்டுதல்கள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நீதிமன்றம் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை போலீஸாருக்கு டிஜிபி நினைவு படுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வழிகாட்டுதல்கள்
⧭⃝ புகார்களில் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டியதில்லை.
⧭⃝ புகாரில் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் தெரியாமல் போனால், முதல்கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ விசாரணைக்குப் பின், புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்து,அந்தப் புகார் முடிக்கப்பட்டால், புகார்தாரருக்கு அதற்கான ஆவணத்தை,ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அதில் புகார் முடிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட வேண்டும்.
⧭⃝ புகாரில் உண்மை இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் கடமை தவறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
⧭⃝ புகார் உண்மையானதா? பொய்யானதா? என்பதை பார்க்காமல்,குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
⧭⃝ குடும்பத் தகராறு, வணிகக் குற்றங்கள், மருத்துவ கவனக்குறைவு,ஊழல், தாமதப் புகார்கள் மீது 7 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.
⧭⃝அதற்குமேல் புகாரை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை காவல்நிலையக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ காவல்நிலைய பொது குறிப்பேடு, நிலையக் குறிப்பேடு, தினக் குறிப்பேட்டில் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...